கடந்து வந்த பாதை 2016…
December 28, 2016
<p align="center">“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.”</p>
2016 மொசில்லா தமிழ்நாடு குழுவிற்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. இந்த ஒரு வருட பயணத்தில் நானும் ஒரு பங்களிப்பாளனாக இவர்களுடன் பயணித்தேன் என்பதில் மகிழ்கிறேன்….
2016 தொடக்கம் முதலே நாம் பலவிதமான செயல்வரைவுகளைத் தீட்டி அதனைச் செயல்படுத்தி வந்துள்ளோம். அவ்வாறு எடுத்துக்கொண்ட செயல்வரைவுகளில் நாம் முதன்மையாக எடுத்துகொண்டு செயல்படுத்தியது தமிழ் உள்ளூராக்கம்/மொழிபெயர்ப்பு ஆகும். அதன்பின் மொசில்லாவின் பிரதிநிதிகளாக செயல்வரைவுகளைப் பல மட்டங்களில், பல்வேறு வடிவங்களில் (நிகழ்வுகள் பயிற்சிப்பட்டறைகள்) செயல்படுத்தினோம். அதன் அடிப்படையில் பெற்ற படிப்பினைகளை வைத்து இன்று தமிழ்நாடு மொசில்லா பங்களிப்பாளர்களின் சந்திப்பினை நடத்தவுள்ளோம்.
கடந்த வந்த பாதைகள்:
- பிப்ரவரி மாதம் மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உள்ளூராக்கத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியது. இந்த நிகழ்ச்சியில் 600 பேர் கலந்து கொண்டனர்.
- மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விழுப்புரத்தில் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களுக்கு மொழிபெயர்ப்பில் பங்களிப்பது குறித்து நிகழ்சி நடத்தப்பட்டது. இதில் சுற்றியுள்ள கல்லூரிகளை சேர்ந்த 23 பேர் கலந்து கொண்டனர்.
- தொடர்ந்து மாத இறுதியில் மயிலம் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கணினி துறை மாணவர்களுக்கு கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் குறித்தும், மொசில்லா தமிழ் உள்ளூராக்கம் குறித்தும் உரையாற்றினோம்.
- ஜீன் மாதம் Weeks Of Contribution’16 தமிழ் மொழிபெயர்பினை பயிற்சி வகுப்பாக ஏற்பாடு செய்து அதில் ஆர்வத்துடன் பங்கேற்ற புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவித்து அவர்கள் உதவியுடன், Pootle மற்றும் Pontoon இல் 4800க்கும் அதிகமான வாக்கியங்களை மொழிபெயர்த்தது தமிழ் மாநில மொசில்லா குழுவின் மிகப்பெரிய இலக்காகும்.
- ஆகஸ்ட் மாதம் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் கருத்தரங்கில் தமிழ் மொழிபெயர்ப்பினுக்கு பங்களிப்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
- டிசம்பர் 2016 இல் புதிய பங்களிப்பாளர்களுக்கு மதுரையில் மொசில்லா தமிழ்நாடு குழுவின் சந்திப்பு குறித்தும் அதன் செயல்வரைவுகள் மற்றும் உள்ளூராக்கத்தின் அவசியம் குறித்து உரையாற்றப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மொழிபெயர்பினுக்கு முக்கியத்துவம் அளித்து இயங்கி வந்ததை தொடர்ந்து குறிப்பிட்ட அளவு பங்களிப்பாளர்களை உருவாக்கியுள்ளோம். இவர்களை கொண்டு வரவிருக்கும் புதிய வருடத்திலும் தமிழ் மொழியாக்கம் குறித்து இன்னும் பல தளங்களுக்கு கொண்டு செல்வோம்.